மதிமயக்கும் மாலைவேளை
தென்றலின் தாலாட்டில்
வெந்தணிந்த வெய்யிலின்
சுகம் கன்னம் வருட
உள்ளமெலாம் உற்சாகம்;
சாலையோர சோலைதனில்
சாய்ந்திருந்த நாற்காலியில்
சற்றே சரிந்திருந்தப்போது
இனியக் குரலொன்று
இதயம் தொட்டது செவிவழியே!
“மண்ணலம் பேணா – இம்மூடர்தமை
மனிதரென்றே உரைக்கின்றார்
மனிதத்தை மறந்துவிட்டு
தன்னலத்தில் திளைக்கின்றார்”
இனிதான குரலில்
இதயம் துளைக்கும்
வார்த்தைகள் கூர்மையோடு;
யாரென்ற ஆவலினால்
நாற்புறமும் நோக்கினேன்;
தூரத்தே முதியவரொருவர்
தொலைந்துப் போனதெதையோ
துரிதமாகத் தேடியப்படி;
சற்றே தள்ளி
சடுகுடுவில் பாலகர்கள்;
யார் இவர்?
குழப்பத்தி லாழ்ந்தப்போது
குரலொலி மீண்டும்!
“அருகிலிருப்பதையறியாமல்
அண்டமெலாம் தேடலில்;
மனிதம் காக்கவே துப்பில்லை
மரத்தையும் மண்ணையும்
காப்பரோ – இம்மூடர்”
சினத்தில் முகம்
சிவக்க தேடினேன் – அருகே
சிறுசெடியின் மலரிதழில்
தேனியொன்றை நோக்கி!!
பூச்சியும் பேசுமோ – சந்தேகம்
பூவுக்கு முன்பே
மீண்டும் ஒலித்தது
அக்குரல்!
“இவ்வுலகதந்தனில்
மரமும் பேசும்
மலரும் பேசும் – அனைத்து
உயிர்களும் பேசும்!
மானிடரோ தாம்மட்டும்
பேசுவதாயெண்ணி
தற்பெருமை கொள்கின்றார்;
தலைக்கனம் பிடித்து
தன்னலத்தால்
மண்ணலமும் மறக்கின்றார்!
தேனியின் குரல்தான் உணர்ந்தேன்!
“சிறுபூச்சி நீ
மூச்சுவிட்டாலே
மூன்றடி தூரம்போவாய்!
வாயை நீட்டி
வார்த்தைகளடுக்குகின்றாய்;
மானிடத்தின் மகிமையறிவாயா நீ?!
வானமளக்கின்றோம்
கடல் வென்றோம்
மலையாழ்கின்றோம்;
மழை பொழிவிப்போம் – மன்னதனிலே
காற்றையும் மின்சாரமாக்குவோம்;
அறிவியலில் வல்லோர்யாம்
அனைத்து மறிவோம்
அனுவையும் பிளப்போம்;
உன்னாலென்ன முடிந்தது
உன் குலத்தாலனதென்ன
உணராமல் பேசி உதைப் படாமல்
உன் வேலையைப் பார்”
மூச்சிறைத்தது எனக்கு
முடிப்பதற்குள்!
புன்னகயோடு மீண்டும்
பாடியது தேனி!
விதைகளில்லா மரம்படைத்து
வித்திட்டீர் காடுகளழிவிற்கு – அதனால்
இயற்கைமழை யற்றுப்போக
செயற்கை மழைக்கு
விதைத்தேடி யலையும்
வீனர்கள் நீங்கள்!
ஓசோனைக் கிழித்தெறிந்து
ஓய்வெடுக்கின்றீர் குளிரறையில்
உலகமே மூழ்குமோர் நாள்
உருகுகின்ற பனிமலையதனால்;
உணர்வீர் நீரானாலும்
உருப்படியாய் செய்ததென்னதற்கு!
பயனிலா மனிதன் அவனை
மண்ணென வையும் மடையீர் – நீர்
காணும் பொருள் யாவும்
மண்ணின்றி தோன்றலாகாது என்பதை
மறுக்கவும் வழியுண்டோ!?
மண்ணிலன்றி வந்தவை யிதுவென
ஓர் துகளையும்
கண்ணில் காட்ட முடியுமோ
உன்னால்!!!?
மண்ணைத் தோண்டி
விண்ணை முட்டும்
கட்டிடஙகளே
காணுமிடம் யாவும்!
பள்ளமான இடம் தேடி – பூமிப்
படுக்கைகள் நகரும்போது
சுனாமியை மட்டுமின்றி
சுட்டெரிக்கும் தனலையும்
தன் மேற்பரப்பில்
விதைக்கின்ற நாள்
வெகுதூரமில்லை – இப்
பூமிப் பெண்ணிற்கு!
இது புரியாமல்
விஞ்ஞானம் பேசிப் பேசி
அஞ்ஞானம் அறியா
அறிவீலிகளடா நீங்கள்
ஆனாலும் சொல்லிக்கொண்டீர்
அறிவாளிகளென்று!!!!
ஹ்ம்ம்…..
சாடியாகப்போவ தொன்றுமில்லை
காடுகள் பெருக்கிட வேண்டும் – நானதற்கு
மலர் தாவ வேண்டும்
மகரந்தம் எடுக்க
மனிதனல்ல நான்
விஞ்ஞானம் பேசி
வீணாய் பொழுதைக் கழிக்க
மறுமொழி பாராமல்
மலர் தாவிய தேனி
மனதில் நின்றது…
மரம் வளர்த்து மண் வளம் காப்பதே
மனித வாழ்க்கையில்
மகத்தான பணியென – என்
மனதில் தோன்ற
மரக்கிளைகள் மௌனமாய்
தலையசைத்தது
மென் தென்றல் முகம் வருட!!
Monday, March 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)

அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News